செவ்வாய்க்கிழமை, ராகு கால பூஜைக்கு குளித்துவிட்டோ, உணவருந்தாமலோ செல்வதில்லை. ஏன் இந்த முரண்பாடு? -கே.எல். பகவதி, சென்னை-91.
நீங்கள் சொல்வது மாதிரி நடக்கிறதா எனத் தெரியவில்லை. பொதுவாக, பூஜைக்கு போகும்போது குளித்துவிட்டு, உணவு உண்ணாமல் செல்லும் பழக்கம்தான் உள்ளது. ஒரு வேளை செவ்வாய்க்கிழமை ராகு கால பூஜை நேரம், ரொம்ப காலம் தாழ்த்தி வருவதால், உணவு உண்டு விடுவார்கள் போலும், மற்றபடி நீங்கள் கூறியபடி இருக்க வாய்ப்பில்லை.
நாள் கோள் பார்ப்பது மூடநம்பிக்கையா?-ஆர்.கே. லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
முதலில் ஜோதிடம் பார்ப்பது என்றால் என்ன? கிரகங்கள் எந்த நிலைமையில் நகர்ந்து கொண்டு உள்ளனர். அந்த நகர்வு, மனிதர்களை எவ்விதம் பாதிக்கிறது. அந்த கிரகங்களின்மூலம் மனிதருக்கு எந்த நன்மை எப்படி கிடைக்கச் செய்யலாம் என்றெல்லாம் கணித்து கூறுவதை, ஜோதிடம் பார்ப்பது என்கின்றனர்.கிரகங்கள், நட்சத்திரங்கள், திதி ஆகியன இப்படி இருந்தால் இந்த மாதிரி பலன்கள் உண்டாகும் என்பதை ஜோதிட சாஸ்திரம் எடுத்துக் கூறுகிறது.இதனால்தான், ஜோதிடத்தை வேத புருசனின் கண் என்று கூறுவர். இதன் மூலம் கால நகர்வை எளிதாக புரிந்து தெரிந்து கொள்ளலாம். இப்போதும் முகூர்த்தம் வைப்பதற்கு கிரக நிலைகளை நன்கு பார்த்துத்தான் முடிவு எடுக்கிறோம்.நமது வாழ்வு விஷயங்கள், நீடித்து நன்மையாக நடக்க, நல்ல நேரம் குறிப்பது அவசியம்.இது மூடநம்பிக்கை, நடக்கிறதுதான் நடக்கும் என்று கூறுபவர்கள் கூறிவிட்டு போகட் டும். நல்ல நேரம் தேர்ந்தெடுத்து செய்தால், அந்த விஷயம் வில்லங்கம் இல்லாமல் பூர்த்தி ஆகும். எனும் மன நம்பிக்கை வருகிறதே, அது யானை பலத்தை மனதிற்குத் தரும். அதைவிட வேறென்ன வேண்டும்.
இன்றைய சூழலில் குடும்பப் பிரச்சினைகளுக்கு காரணம், எதர்த்தமான மனப்போக்கு இல்லாமல் இருப்பது. இதற்கு தீர்வு என்ன?-தீபக், சென்னை-30.
நீங்கள் கூறுவது உண்மைதான். இதற்கு கால கூட்ட மனமாற்றம் தான் காரணம். அப்போதெல்லாம், ஒருவருக்கொருவர் ரொம்ப ஒத்தாசையாக இருப்பர். உதாரணத்திற்கு, ஒரு தெருவில் கல்யாணம் என்றால், அந்த தெருவை அடைத்து பந்தல் போடுவர். மற்றவர்கள் அதனை ஒரு எரிச்சலாக நினைக்காமல், தெருவை சுற்றி போவார்கள். சாப்பாட்டு பந்தி, பக்கத்து வீட்டில் எல்லாம் நடக்கும். ஆக கல்யாண மண்டபம் என்ற பேச்சே கிடையாது. எல்லாரும் எளிமையாக, சற்று வெள்ளந்தியாக வாழ்ந்தனர். ஒருவரும் முகமூடியுடன் வலம் வரவில்லை எனவே மன கல்மிஷம் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்தனர்.இப்போது வாழ்வு, பண வசதியால் மட்டுமே நிறுக்கப்படுகிறது. சொந்தக்காரன், ஒரு சொகுசு கார் வாங்கினால் இவன் அதைவிட அதிக விலையில் கார் வாங்குகிறான். எல்லா விஷயத்திலும் இதை பின்பற்றுகின்றனர். எனவே போட்டி, பொறாமை, நிம்மதியின்மை இவைதான் மிஞ்சுகிறது. இது தேவையா? அடுத்தவன் மதிக்க வேண்டும் என கடன் வாங்கி செலவழிக்கிறார்கள். தயவு செய்து இந்த மாதிரி பகட்டு வாழ்க்கையை, பொய் தோற்றம் தருவதை, தான்தான் உலகிலேயே பெரிய பிஸ்தா என்பதையெல்லாம் நிறுத்துங்கள். எது உளதோ அது படி வாழ பழகுங்கள். காலப்போக்கில் உங்கள் உண்மை, உங்களுக்கு அளப்பரிய மரியாதை யைக் கொடுக்கும். இதுவே குடும்பங்கள் எதார்த்தமாக இருப்பதற்குரிய தீர்வாகும்.
அறிவியலின் உச்சம் தொட்டவர்களும் ஆன்மிக நம்பிக்கை கொண்டிருக்க, அரசியல்வாதிகள் ஏன் அவநம்பிக்கையாக இருக்கிறார்கள்?-செல்வி, மதுரை.
அடடா, உலகம் தெரியாமல் இருக்கிறீர்களே! அரசியல்வாதிகள்தான் நம் எல்லாரையும்விட அதிக ஆன்மிக பற்று கொண்டவர் கள் என்ன ஒன்று ரகசியமாக சாமி கும்பிட் டுக்கொள்வார்கள். அவ்வளவுதான்.
காரைக்கால் அம்மையார், ஔவையார், சாரதா அன்னை மூவருக்குமான ஆன்மிகம், மக்களுக்கு கூறும் வழிகாட்டல் என்ன?-கலையரசி, நெல்லை.
ஔவையார்: இவர் தமிழ்நாட்டு பாட்டி. விநாயகரின் பெரும் பக்தை. இவர் வணங்கும் விநாயகர் ஒரே இடத்தில் இருக்க இந்த பாட்டி உலகம் முழுவதும் அலைந்தாள். அத்தனை குழந்தைகளையும், தர்ம நெறியில் செல்ல வைக்க வேண்டுமென்று, மிக எளிதான ஆத்திச்சூடி கொடுத்து அருளினாள். அவருடைய ஞானம் மிக ஒப்புறவு அற்றதாக இருக்க அவளோ, மிக எளிமையான வார்த்தைகளை தேர்ந்தெடுத்தாள். அறம் செய் என கட்டளையிடாமல், ஒரு பாட்டியின் பாசத்தோடு அறம் செய விரும்பு என்றாள். பிள்ளையார் பக்தை ஆதலால், சிறு வயதிலேயே, அவரிடம் வேண்டிக்கொண்டு, கிழவி ஆகிவிட்டாள். இதனால், குழந்தைகள் கொண்டாடும் தமிழ்நாட்டு பாட்டி ஆகிவிட்டாள்.ஔவை கயிலை சேர்ந்தது: மலையாள தேசத்தைச் சேர்ந்த, மன்னர் சேரமான் பெருமாள். இவரின் ஆத்ம நண்பர் சுந்தரமூர்த்தி ஒரு நாள் அரசன் ஸ்நானம் செய்ய சென்ற போது, சுந்தரமூர்த்தி, கோவிலுக்கு சென்றார். ஏனோ அவர் மனம் மிக விரக்தியடைந்த நிலையில் வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன் என்று கதற, அதைப் பார்த்த சிவபெருமான். அட என் பக்தன் என்னிடம் வர துடிக்கிறான். தேவர்கள் எல்லாரும் ஐராவத்தோடு போய் அழைத்துக்கொண்டு வருக என கட்டளையிட, அவர்களும் சுந்தரமூர்த்தியை அழைத்துக் கொண்டு சென்றனர்.இதனை கண்ட மன்னனும் குதிரை மேலேறி. நண்பரை தொடர்ந்து சென்றார்.போகும் வழியில், ஔவையார், பிள்ளையார் பூஜை செய்து கொண்டு இருப்பதைக்கண்டு, பாட்டி கூடவாயேன் உன்னையும் கூட்டிட்டு போறோம் என்க, அவளோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், எனக்கு இன்னும் பிள்ளையார் பூஜை முடியலை, நீங்க போங்க என்று கூறிவிட்டார். கவனியுங்கள். கூப்பிட்டது கைலாயத்திற்கு அதையும் நம்ம ஔவையார் பாட்டி நோ என்று கூறிவிட்டார். அன்று பார்த்து, பிள்ளையாரும் ரொம்ப நிதானமாக, நாலும் கலந்த நைவேத்யத்தை சாப்பிட்டு, ரொம்ப டிலே பண்ணினார்.பிறகு, பிள்ளையார், எனக்கு கைலாசத்துக்குத்தான் போகனும். ஊர் குழந்தைகளுக்கு எல்லாம் பாடிட்டே எனக்காவும் ஒரு பாட்டு பாடு என்க ஔவையாரும் விநாயகர் அகவல் எனும் ஸ்தோத்திரம் பாடினார். அதைக் கேட்டு மகிழ்ந்த விநாயகர் அவளை தன் துதிக்கையாலேயே தூக்கி, கைலாயத்தில் வைத்துவிட்டார்.இவள் போன பிறகுதான் சுந்தமூர்த்தி சுவாமிகளும், சேரமான் பெருமாள் நாயனாரும் அங்கு போய் சேர்ந்தார்களாம்.இதற்கு காரணம், ஔவையாருக்கு, விநாயகரின் மீதிருந்த அளவு கடந்த பக்தியே ஆகும். காரைக்கால் அம்மையார்: இவர் காரைக்காலில், பரமதத்தன் என்னும் வணிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட மாதரசி ஆவார். ஒருநாள் இவள் கணவன் இரு மாம் பழங்களை கொண்டு வந்து கொடுத்தார். பின் சிவன் அடியவர் வேடம் பூண்டு இவரிடம் அன்னம் யாசிக்க, இந்த பெண்மணி, இருந்த தயிர் சாதமும், மாம்பழ துண்டுகளையும் கொடுத்தார். பின் வந்த கணவன், இன்னொரு மாம்பழம் கேட்க, இவர், சிவனிடம் பிரார்த்தித்து, மாம்பழம் வரவழைத்து கொடுத்தார். அது மிகவும் ருசியாக இருக்கவே, காரணம் கேட்க, இந்த பெண்மணி, மறுபடியும் சிவனிடம் வேண்டி, மாம்பழங்களை கொடுத்துள்ளார்.இதை பார்த்து அரண்டு போன கணவர், இவர் ஒரு தெய்வ பிறவி என அஞ்சி விலகினார்.இவர் பின்பு ஈசனிடம் வேண்டி பேய் உருவம் பெற்று, கயிலாயத்திற்கு கால் பதித்து நடக்காமல், கை ஊன்றி தலையால் நடந்து சென்றார்.இதனை கண்ட ஈசன் மகிழ்ந்து வரம் தர விழைய, காரைக்கால் அம்மையார் ஈசனின் திருநடனத்தை காண விழைத்தார். திருவாலங்காட்டில் ஈசன் திரு நடனம் புரிய அதனை கண்டு பெரும் பேறு பெற்றார் காரைக்கால் அம்மையார்.சாரதா அன்னை: ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சரின் மனைவி, சாரதா தேவி ஆவார். எனினும் அவரின் முதல் சீடரே இவர்தான். அவருக்கு ஒரு தாயைப் போல் இருந்து, சேவைகள் செய்தார். பின் அந்த மடத்தின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் முக்கிய தூணாக இருந்தார். மிகச் சிறந்த காளி பக்தை இவர்.
ஔவையார், காரைக்கால் அம்மையார், சாரதா அன்னை இந்த மூவரும், இவ்வுலகில் இறை பக்தியை உறுதிப்பட உரைக்கின்றனர். இவர்களின் பக்தியின் உறுதித் தன்மை வியக்க வைக்கிறது. தெய்வ பக்தி, எத்தனை நம்பிக்கையுடன், முழுமையாக இருக்க வேண்டும் என்பதை தெளிவாக சொல்லிக்கொடுக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/01/qa-2025-10-01-17-59-45.jpg)